vic_logo
coronavirus.vic.gov.au

சுகாதார அறிவுரை மற்றும் கட்டுப்பாடுகள் (Health advice and restrictions) - தமிழ் (Tamil)

கொரோனா வைரஸ் (COVID-19) பெருந்தொற்றுப் பரவல் பற்றிய தகவல்கள், புதுவிவரங்கள் மற்றும் ஆலோசனைகள்.

உங்களுக்கு ஆதங்கம் ஏதும் இருந்தால், கொரோனா வைரஸ் அவசரகாலத் தொடர்பினை 1800 675 398 என்ற தொலைபேசி எண்ணில் (24 மணி நேரம்) அழைக்கவும்.
மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், TIS National-ஐ 131 450 என்ற தொலைபேசிஎண்ணில் அழைக்கவும், அல்லது கொரோனா வைரஸ் அவசரகாலத் தொடர்பினை 1800 675 398 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து தெரிவு எண் 0 -ஐ அழுத்தவும்.
இலக்கம் ‘000’ -வை அவசரகாலங்களுக்கு மட்டுமென வைத்துக்கொள்ளவும்.

நீங்கள் கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டியவைகள்

நமது குடும்பங்களையும், சமூகத்தினரையும் கொரோனா வைரசிலிருந்து (COVID-19) பாதுகாக்க நம்மால் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள் உள்ளன:

 • சட்ட ரீதியான ஒரு விதிவிலக்கு இருந்தாலொழிய, எல்லா நேரங்களிலும் முகக்கவசம் ஒன்றை எடுத்துச் செல்லவும், அத்துடன் உங்களுடைய சொந்த வீட்டிற்கு வெளியே இருக்கும்போது முகக்கவசம் ஒன்றை அணியவும்.
 • உங்களுடைய கைகளைத் தவறாமல் கழுவவும். சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது கைச் சுத்திகரிப்பானைப் பயன்படுத்தவும். மேற்பரப்புகளின் மீது அநேக நாட்களுக்கு உயிரோடு இருக்கக் கூடிய கோவிட்-19 -லிருந்து நம்மைப் பாதுகாக்க இது உதவும்.
 • மற்றவர்களிடமிருந்து குறைந்தது 1.5 மீட்டர் இடைவெளியில் விலகியிருக்கவும்.
 • நீங்கள் சுகவீனமாக இருப்பதாக உணர்ந்தால், பரிசோதனை செய்து கொள்ளவும். அத்துடன் வீட்டிலேயே இருக்கவும். உங்களுக்கிருக்கும் நோயறிகுறிகள் மிதமானவையாகவே இருந்தாலும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வது கோவிட்-19 தொற்றுப் பரவலைக் குறைக்க உதவும்.
 • கோவிட்-19 பரிசோதனை அனைவருக்கும் இலவசமாகச் செய்யப்படும். வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மற்றும் புகலிடம் வேண்டுவோர் போன்ற மெடிகேர் (Medicare) அட்டை இல்லாதவர்களும் இதில் அடங்குவர்.
 • கோவிட்-19 தடுப்பூசிக்கான தகுதி உங்களுக்கு இருந்தால், அதைப் போட்டுக்கொள்ளவும்.
 • ஒரு வணிகம் அல்லது பணியிடத்திற்குள் நீங்கள் நுழைய வேண்டுமானால் ‘விக்டோரியா சேவை’ செயலியைப் (Service Victoria app) பயன்படுத்தி உங்களுடைய வருகையை நீங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யவேண்டும்.

விக்டோரிய மாநிலத்தின் தற்போதைய கட்டுப்பாட்டு அளவுகள்

சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டால், விக்டோரியத் தலைமைச் சுகாதார அதிகாரி (Victorian Chief Health Officer) கட்டுப்பாடுகளை மாற்றக்கூடும்.

2021 ஜூலை 27 செவ்வாய்க்கிழமை இரவு 11:59 மணி முதல்

 • வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கான காரணங்கள் மீதான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
 • நீங்கள் பயணம் செய்யக்கூடிய தூரத்திற்கான வரம்புகள் எதுவும் இல்லை.
 • நீங்கள் விக்டோரியா மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம், ஆயினும் ஆல்பைன் உல்லாசத் தலங்களுக்குப் (alpine resorts) பயணிக்க, சில கட்டுப்பாடுகள் உள்ளன.
 • நீங்கள் ஆல்பைன் உல்லாசத் தலங்களுக்கு வருவதற்கு 72 மணி நேரங்களுக்குள், ஒரு கோவிட்-19 பரிசோதனையைச் செய்து, அத்துடன் எதிர்மறையான சோதனை முடிவைப் பெற்றிருந்தால் மட்டுமே உங்களால் பிராந்திய விக்டோரிய ஆல்பைன் உல்லாசத் தலங்களுக்குப் பயணிக்க முடியும். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பரிசோதனை செய்யத் தேவையில்லை. எதிர்மறையான உங்கள் சோதனை முடிவின் ஆதாரத்தை, பனிச்சறுக்கு மைதானங்களுக்குள் நுழைவதற்கான நிபந்தனையாக நீங்கள் கட்டாயம் காண்பிக்கக்கூடியதாக இருக்கவேண்டும், எடுத்துக்காட்டாக, உங்கள் சோதனை வழங்குநரிடமிருந்து பெற்ற ஒரு குறுஞ்செய்தி.
 • சட்டப்படியான விதிவிலக்கு இருந்தாலொழிய, எல்லா நேரங்களிலும் நீங்கள் உங்களுடன் முகக்கவசம் ஒன்றைக் கண்டிப்பாக எடுத்துச்செல்ல வேண்டும்.
 • சட்ட ரீதியான ஒரு விதிவிலக்கு இருந்தாலொழிய, உள்ளிடங்களிலும் வெளியிடங்களிலும் நீங்கள் முகக்கவசம் ஒன்றைக் கண்டிப்பாக அணிய வேண்டும். உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் நெருங்கிய வாழ்க்கைத்துணையின் வீட்டிலோ இருக்கும்போது, நீங்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை.
 • தனிப்பட்ட கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. இதன் பொருள் என்னவென்றால், உங்கள் வீட்டிற்கு நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் வருவதற்கு அனுமதி இல்லை, அத்துடன் நீங்கள் அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கும் அனுமதி கிடையாது.
 • 10 பேர் வரையிலான ஒரு குழுவாக (12 மாதங்களுக்குக் குறைவான கைக்குழந்தைகள் தவிர்த்து) ஒரு பொது இடத்தில், நீங்கள் உங்கள் நண்பர்களையும், குடும்பத்தினரையும் காணலாம். பொது இடம் என்பது பூங்கா அல்லது கடற்கரை போன்ற பொதுமக்களால் அணுகக்கூடிய ஓர் இடமாகும். உங்கள் வீட்டுக் கொல்லைப்புறம் இதில் அடங்காது.
 • ஒரு வணிகம் அல்லது பணியிடத்திற்குள் நீங்கள் நுழைய வேண்டுமானால் ‘விக்டோரியா சேவை’ செயலியைப் (Service Victoria app) பயன்படுத்தி உங்களுடைய வருகையை நீங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யவேண்டும். பல்பொருள் அங்காடிகள், சிற்றுண்டிச் சாலைகள் (cafes) மற்றும் பணியிட அலுவலகங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லும் வேளைகள் இதில் அடங்கும்.

வேலை மற்றும் படிப்பு

 • பள்ளிக்கூடங்களும், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும்.
 • பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும்.
 • உங்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவோ, அல்லது படிக்கவோ முடியுமானால், நீங்கள் அவ்வாறே தொடர்ந்து செய்ய வேண்டும்.
 • உங்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியாவிட்டால், நீங்கள் வேலைக்குச் செல்லலாம்.
 • அலுவலகங்கள் போன்ற பணியிடங்கள், மொத்தமாக 25 சதவீதம் அல்லது 10 நபர்கள், இதில் எது அதிகமோ அந்த அளவுக்கு அதிகரிக்கலாம். 25 சதவீதத்துக்கு மேலோ அல்லது 10 நபர்களுக்கு மேலோ (இதில் எது அதிகமோ) வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாவிட்டால், இந்த அதிகபட்ச வரம்பை மீறலாம்.

வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள்

 • 4 ச.மீ.க்கு 1 நபர் என்ற ஆள்-அடர்த்தி வரம்புடன் கடைகள் திறந்திருக்கும். கடையில் பொருட்களை வாங்கும்போது அங்கு அனுமதிக்கப்படும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை வரம்புக்குள் வைத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வரம்பு, கடையில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் 1.5 மீட்டர் தூரத்தைக் கடைப்பிடிக்க உதவுகிறது.
 • 4 ச.மீ.க்கு 1 நபர் என்ற ஆள்-அடர்த்தி வரம்புக்கு உட்பட்டு, அழகு நிலையங்கள் மற்றும் தனிநபர் உடல் பராமரிப்புச் சேவைகள் திறந்திருக்கும். முகத்தை அழகுபடுத்தல் அல்லது தாடியைச் சீராக்குதல் போன்றவற்றைச் செய்வதற்கான தேவை ஏற்படும்போது, முகக்கவசங்களை அகற்றலாம். சட்ட ரீதியான ஒரு விதிவிலக்கு இருந்தாலொழிய, உங்கள் சேவை வழங்குநர் முகக்கவசம் ஒன்றை அணிய வேண்டியிருக்கும்.

விளையாட்டுகள்

 • அனைத்து சமூக விளையாட்டுகளும் உள்ளரங்குகளிலும், வெளியரங்குகளிலும் அனுமதிக்கப்படும்.
 • பயிற்சியளிக்க அல்லது போட்டியிடத் தேவையான குறைந்தபட்ச பங்கேற்பாளர்கள் (விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், அதிகாரிகள் மற்றும் பராமரிப்பாளர்கள்/பெற்றோர்கள்), ஆள்-அடர்த்தி வரம்புகளுக்கு உட்பட்டு, கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
 • உடற்பயிற்சி நிலையங்கள் (gyms) உள்ளிட்ட உடல்சார்ந்த உள்ளரங்குப் பொழுதுபோக்கு மையங்கள், ஆள்-அடர்த்தி வரம்புகளுடன் திறக்கப்பட்டிருக்கும்.
 • குழு உடற்பயிற்சி வகுப்புகள், உள்ளரங்குகள் மற்றும் வெளியரங்குகள் இரண்டிலும், 10 நபர்கள் வரையிலான வரம்புடன் அனுமதிக்கப்படுகின்றன.
 • உள்ளரங்கு இடங்களில் அதிகபட்சமாக 100 பேர் மற்றும் வெளியரங்கு இடங்களில் 300 பேர் என்ற அளவில், நீச்சல் குளங்கள் திறக்கப்பட்டிருக்கும்.

மதம் மற்றும் சடங்குகள்

 • திருமணங்களில் அதிகபட்சமாக 50 நபர்கள் வரை கலந்துகொள்ளலாம். மணமக்களும், இரு சாட்சிகளும் இந்த வரம்பில் அடங்குவர். திருமணச் சடங்காளர், புகைப்படக்காரர் மற்றும் இந்நிகழ்ச்சியில் பணியாற்றுவோர்கள் இதில் அடங்க மாட்டார்கள்.
 • இறுதிச் சடங்குகளில் 50 நபர்கள் வரை கலந்துகொள்ளலாம். இறுதிச் சடங்கினை நடத்துபவர்கள் இதில் அடங்க மாட்டார்கள்.
 • உள்ளிடங்களில் 100 பேர் வரையிலும், வெளியிடங்களில் 300 பேர் வரையிலுமான மதக் கூட்டங்கள் நடத்தப்படலாம். 4 ச.மீ.க்கு 1 நபர் என்ற ஆள்-அடர்த்தி வரம்புகளும் உண்டு.

விருந்தோம்பல் சார்ந்த வணிகங்கள்

 • உணவகங்கள் (restaurants), மதுக் கடைகள் (pubs), மது அருந்தும் இடங்கள் (bars), மற்றும் சிற்றுண்டியகங்கள் (cafes) ஆகியவை, மொத்த வளாக அதிகபட்ச வரம்பாக 100 பேர் வரையில் அமரும் வகையிலான சேவையுடன் திறக்கலாம். ஆள்-அடர்த்தி வரம்புகளும் உண்டு. 'விக்டோரியா சேவை' செயலியைப் (Service Victoria app) பயன்படுத்தி மக்களின் நுழைவைக் கண்காணிக்க, கோவிட் பதிவைச் சரிபார்க்கும் அதிகாரி (COVID Check-In Marshal) ஒருவர் அனைத்து வளாகங்களிலும் இருப்பார்.
 • 100 சதுர மீட்டருக்குக் குறைவான வளாகங்களில் 25 நபர்கள் வரை இருக்கலாம்.
 • அமர்ந்து உண்ணும் வகையிலான சேவைக்கு, உணவுக்கடைத் தொகுதிகள் (food courts) திறக்கப்பட்டுள்ளன. ஒரு வளாகத்துக்கு அதிகபட்ச வாடிக்கையாளர்கள் 100 பேர் என்ற வகையில், ஆள்-அடர்த்தி வரம்புகள் உண்டு.

பொழுதுபோக்கு வசதிகள்

 • திரையரங்குகள், சூதாட்டக் கூடங்கள் (casinos), சூதாட்ட இயந்திரங்கள் (pokies), கூரை மேவிய நடைபாதைகள் (arcades), இயைந்து பாடுமிடங்கள் (karaoke), இரவு விடுதிகள் (nightclubs) போன்ற பொழுதுபோக்கு வளாகங்கள், ஆள்-அடர்த்தி வரம்புகள், வாடிக்கையாளர் அதிகபட்ச வரம்புகள், மற்றும் குழு வரம்புகள், அத்துடன் உள்நுழையும்போது கோவிட் பதிவைச் சரிபார்க்கும் ஓர் அதிகாரி (COVID Check-in Marshal) ஆகியவற்றுடன் திறந்திருக்கின்றன.
 • நூலகங்கள் மற்றும் அண்டைச் சமூக மையங்கள் உள்ளிட்ட சமூக வளாகங்கள், உட்புற இடத்திற்கு 100 பேர் வரையிலும், வெளிப்புற இடத்திற்கு 300 பேர் வரையிலும் திறந்திருக்கும். ஆள்-அடர்த்தி வரம்புகளும் உண்டு. அதிகபட்சக் குழு அளவு 10 நபர்கள் ஆகும்.
 • 'விக்டோரியா சேவை' செயலியைப் (Service Victoria app) பயன்படுத்தி மக்களின் நுழைவைக் கண்காணிக்க, கோவிட் பதிவைச் சரிபார்க்கும் அதிகாரி (COVID Check-In Marshal) ஒருவர் அனைத்து வளாகங்களிலும் இருப்பார்.

முகக் கவசங்கள்

 • சட்ட ரீதியான ஒரு விதிவிலக்கு இருந்தாலொழிய, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் உள்ளிடங்களிலும், வெளியிடங்களிலும் முகக்கவசம் ஒன்றைக் கண்டிப்பாக அணிய வேண்டும். நீங்கள் வீட்டில் முகக்கவசம் அணியத் தேவையில்லை.
 • சட்டப்படியான விதிவிலக்கு இருந்தாலொழிய, எல்லா நேரங்களிலும் நீங்கள் உங்களுடன் முகக்கவசம் ஒன்றைக் கண்டிப்பாக எடுத்துச்செல்ல வேண்டும்.
 • முகக்கவசத்தை அணியாமல் இருப்பதற்குச் சட்டப்படியான காரணங்களுக்கான எடுத்துக்காட்டுகளில் பின்வருவன அடங்கும்:
  • உங்களுடைய முகத்தில் கடுமையான தோல் நோய்த் தன்மை அல்லது சுவாசப் பிரச்சினை போன்ற மருத்துவக் காரணங்கள் இருந்தால்
  • உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் பொழுது மூச்சுத் திணறல் இருந்தால்.

பரிசோதனை மேற்கொள்ளல் மற்றும் தனிமைப்படுத்துதல்

கொரோனா வைரசுக்கான (COVID-19) நோயறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கிருந்தால், நீங்கள் கட்டாயம் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் அத்துடன் அதன் முடிவு வரும் வரை நீங்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும். வேலைக்கோ அல்லது கடைகளுக்கோ போகவேண்டாம்.

கோவிட்-19 இன் நோயறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:

 • காய்ச்சல், குளிர்க்காய்ச்சல் அல்லது வியர்த்தல்
 • இருமல் அல்லது தொண்டை வலி
 • மூச்சுத்திணறல்
 • மூக்கு ஒழுகுதல்
 • வாசனைத் திறன் அல்லது சுவைத் திறன் இழப்பு

கொரோனா வைரஸ் (COVID-19) பரிசோதனை அனைவருக்கும் இலவசமாகச் செய்யப்படும். வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் புகலிடம் வேண்டுவோர் போன்ற மெடிக்கேர் (Medicare ) அட்டை இல்லாதவர்களும் இதில் அடங்குவர்.

கொரோனா வைரஸ்  (COVID-19) நோய்த்தொற்று உங்களுக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், நீங்கள் கட்டாயம் உங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலேயே இருக்கவேண்டும்.

கோவிட்-19 நோய்த்தொற்றுள்ள எவருடனாவது நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தால், 14 நாட்களுக்கு நீங்கள் கட்டாயம் தொற்றுத்தடுப்புக் காப்பில் (quarantine) (வீட்டிலேயே இருத்தல்) இருக்க வேண்டும். அத்துடன், சுகாதாரத்துறையின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரால் நீங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறலாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படும் வரை நீங்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

நோய்த்தொற்று உள்ளவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவரோடு நீங்கள் வசித்தாலோ அல்லது நேரம் கழித்திருந்தாலோ, நீங்களும் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.

பாதிப்புக்குள்ளான பொது இடங்கள்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன

பாதிப்புக்குள்ளான இடங்கள் எவற்றுக்காவது நீங்கள் குறிப்பிட்ட காலகட்டங்களில் சென்றிருந்தால்:

 • அந்த பாதிப்புக்குள்ளான இடத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட ஆலோசனையைப் பின்பற்றவும்
 • சுகாதாரத் திணைக்களத்தை 1300 651 160 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்
 • எங்கே பரிசோதனை செய்து கொள்வது என்பதை இங்கே பார்க்கவும்

சமீபத்திய பாதிப்புக்குள்ளான இடங்களைக் காண இங்கே சொடுக்கவும்

நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள், அவர்களின் தொற்றுக் காலத்தில் இந்த வளாகங்களுக்கு வருகை தந்துள்ளனர். அதனால் தொடரும் அபாயம் இந்த வளாகங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று அர்த்தமல்ல. தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு இணங்க, நீங்கள் பாதுகாப்பாக இந்த இடத்திற்குச் செல்லலாம்.

கோவிட்-19 நோய்த் தொற்றுள்ள ஒருவர், அந்த இடத்துக்கு வருகை தந்த தேதி அல்லது நேரத்தைத்தான் பாதிப்புக்குள்ளான காலம் குறிக்கிறது. அந்த நபர் நோய்த் தொற்று உள்ள சமயத்தில் அங்கு வருகை தந்துள்ளார். நோயறிகுறிகள் ஏற்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முற்பட்ட காலமும் இதில் அடங்கும்.

தொடர்புத் தடமறிதலின் (contact tracing) போது, இடங்கள் அடையாளம் காணப்படுகின்றன. கோவிட்-19 பரிசோதனை முடிவுகள் யாருக்காவது நேர்மறையாக வந்த பின்னர், தொடர்புத் தடமறிதல் நடைபெறுகிறது.

கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், அந்தக் காலகட்டத்தில் கடைசியாக எப்போது அந்த இடங்களுக்கு வருகை புரிகிறாரோ அதன் பின்னர், 14 நாட்களுக்கு அந்த இடங்கள் பட்டியலில் இருக்கும். ஒருவர் ஒரு இடத்துக்கு வருகை தந்து, கோவிட்-19 உள்ள வேறொருவருடன் தொடர்பு கொண்ட பின்னர், நோயறிகுறிகள் வெளிப்படும்முன்பே அவர் வைரசால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய அதிகபட்ச நேரம் (நோயரும்பும் நேரம் - incubation period) 14 நாட்கள் ஆகும்.

அபாயத்திலிருக்கும் இடங்கள், மிகச் சமீபத்தில் பாதிப்புக்குள்ளான நாளிலிருந்து பட்டியலில் 14 நாட்கள் இடம்பெற்று இருக்கும்.

பாதிப்புக்குள்ளான பொது இடங்களைக் கண்டறியவும்

சமீபத்திய பாதிப்புக்குள்ளான இடங்களைக் காண இங்கே சொடுக்கவும் அல்லது விக்டோரிய மாநிலத்தில் பாதிப்புக்குள்ளான பொது இடங்களின் வரைபடம் ஒன்றைப் பார்க்கவும்.

ஆஸ்திரேலியா முழுவதும் பயணம் செய்தவர்கள், தயவுசெய்து கீழேயுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வெளியிடப்பட்டுள்ள பாதிப்புக்குள்ளான இடங்களின் பட்டியலைப் பார்க்கவும்:

நீங்கள் விக்டோரியாவில் இருப்பவராயின், அத்துடன் குறிப்பிட்ட காலகட்டங்களில் இந்த இடங்களுக்குச் சென்றிருந்தால், பட்டியலிடப்பட்ட ஆலோசனையைப் பின்பற்றவும் மற்றும் 1300 651 160 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

புதிய தகவல்கள் பெறப்படும்போது இந்த வளாகங்கள் புதிப்பிக்கப்படுகின்றன. எனவே, தயவுசெய்து தவறாமல் சரிபார்த்துக் கொள்ளவும்.

பரிசோதனைத் தளங்களின் இருப்பிடங்களைக் காண, பின்வரும் இணையதளத்துக்குச் செல்லவும்: எங்கே பரிசோதனை செய்து கொள்ளலாம்

அடுக்குகள் 1, 2, மற்றும் 3 ஆகியவை விளக்கப்பட்டுள்ளன

அடுக்கு 1 பாதிப்புக்குள்ளான பகுதிகள்

பட்டியலிடப்பட்ட நேரங்களில், அடுக்கு 1 பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு வருகை தந்துள்ள எவரும் கட்டாயம் உடனடியாகத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் (isolate), கோவிட்-19 பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளவேண்டும், மற்றும் பாதிப்புக்குள்ளான நாளிலிருந்து 14 நாட்களுக்கு தொற்றுத்தடுப்புக் காப்பில் (quarantine) வைக்கப்பட வேண்டும். நீங்கள் சுகாதாரத் திணைக்களத்தையும் 1300 651 160 என்ற எண்ணில் கட்டாயம் தொடர்பு கொள்ள வேண்டும்.

அடுக்கு 2 பாதிப்புக்குள்ளான பகுதிகள்

பட்டியலிடப்பட்ட நேரங்களில், அடுக்கு 2 பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு வருகை தந்துள்ள எவரும் உடனடியாக கோவிட்-19 பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளவேண்டும், அத்துடன் எதிர்மறையான முடிவைப் பெறும்வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் சுகாதாரத் திணைக்களத்தையும் 1300 651 160 என்ற எண்ணில் கட்டாயம் தொடர்பு கொள்ள வேண்டும்.

நோயறிகுறிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும். நோயறிகுறிகள் தோன்றினால், மீண்டும் பரிசோதனை செய்து கொள்ளவும்.

அடுக்கு 3 பாதிப்புக்குள்ளான பகுதிகள்

பட்டியலிடப்பட்ட நேரங்களில், அடுக்கு 3 பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு வருகை தந்துள்ள எவரும் நோயறிகுறிகளைக் கட்டாயம் கண்காணிக்க வேண்டும். நோயறிகுறிகள் தோன்றினால், உடனடியாக கோவிட்-19 பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளவும், அத்துடன் எதிர்மறையான முடிவைப் பெறும்வரை தனிமைப்படுத்திக் கொள்ளவும்.

எனக்கு உதவி தேவைப்பட்டால் நான் யாரை அழைக்கலாம்?

உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், விக்டோரிய சுகாதாரத் திணைக்கள கோவிட்-19 அவசரகால இணைப்பை, 1800 675 398 என்ற எண்ணில் அழைக்கவும்.

உங்களுக்குத் தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவைப்பட்டால், தயவுசெய்து 131 450 என்ற எண்ணில் TIS National-ஐத் தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு கிடைக்கும் உதவிகள்

உங்களுடைய பரிசோதனை முடிவுகளைப் பெறுவதற்காக நீங்கள் காத்திருக்கும் வேளையில் உங்களுடைய வருமானத்தை இழந்துவிடுவீர்களோ என்று நீங்கள் கவலை கொண்டிருந்தால், $450 கொரோனா வைரஸ் (COVID-19) பரிசோதனைத் தனிமைப்படுத்தல் உதவியைப் பெற நீங்கள் தகுதியுடையயவராக இருக்கலாம். நீங்கள் வீட்டிலேயே தங்கியிருக்க இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

நோய்த்தொற்று உங்களுக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அல்லது நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒருவருடன் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தால், $1,500 பணப்பட்டுவாடாவுக்கு நீங்கள் தகுதியுடையயவராக இருக்கலாம். மேலதிகத் தகவல்களுக்கு கொரோனா வைரஸ் அவசரகாலத் தொடர்பினை 1800 675 398 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கவும் மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், பூஜ்யத்தை (0) அழுத்தவும்.

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவருக்கோ பதற்ற உணர்வோ அல்லது ஆதங்கமோ இருந்தால், Lifeline -ஐ 13 11 14 என்ற  தொலைபேசி எண்ணில் அழைக்கவும் அல்லது பியான்ட் ப்ளூவை (Beyond Blue) 1800 512 348 என்ற எண்ணில் அழைக்கவும். மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், முதலில் 131 450 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கவும்.

தனிமை உணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருந்தால், கொரோனா வைரஸ் அவசர உதவி இணைப்பினை (Coronavirus Hotline) 1800 675 398 என்ற தொலைபேசி எண்ணில்  அழைத்து எண் மூன்றை (3) அழுத்தவும். மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், பூஜ்யத்தை (0) அழுத்தவும். ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தைச் (Australian Red Cross) சேர்ந்த தன்னார்வத் தொண்டர் ஒருவருடன் உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்து,  உள்ளூர் ஆதரவுச் சேவைகளுடன் உங்களை இணைக்கக்கூடும்.

மூலவளங்கள்

கீழேயுள்ள வளங்களைத் தயவு செய்து பயன்படுத்துங்கள், மற்றும் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள், அல்லது மற்ற சமூகத் தொடர்புவலைகள் மூலமாகக் உங்களுடைய சமூகத்தினருடன் இவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நோயறிவுச் சோதனை மற்றும் தனிமைப்படுத்தல்

பாதுகாப்பாக இருத்தல்

உதவி பெறல்

முகக்கவசங்கள்

Reviewed 29 July 2021

24/7 Coronavirus Hotline

If you suspect you may have COVID-19 call the dedicated hotline – open 24 hours, 7 days.

Please keep Triple Zero (000) for emergencies only.

Was this page helpful?